ரஞ்சி கோப்பை 2023 : தமிழ்நாட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் ஆல்ரவுண்டர் ஜடேஜா!
இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப உள்ளார். 2022 ஆசிய கோப்பையின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட காலம் விலகியிருந்த ஜடேஜா, தற்போது மீண்டும் விளையாட தயாராகியுள்ளார். அவர் வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்காக பயிற்சி பெறும் வகையில் ரஞ்சி போட்டியில் விளையாட அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரில், சௌராஷ்டிராவின் இறுதி குழுநிலை போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாட தயாராகி வருகிறார். சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் இல்லாத நிலையில், சவுராஷ்டிரா அணியை அவர் வழிநடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜடேஜாவின் முக்கியத்துவம்
பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் ஜடேஜா சேர்க்கப்பட்டார். இந்தியா இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்வதற்கு, ஆஸ்திரேலியா தொடர் முக்கியம் எனும் சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த டிராக் ரெகார்ட் வைத்திருக்கும் ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜடேஜா 2012 இல் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து 2,523 ரன்களுடன் 242 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 12 டெஸ்டில் 18.85 சராசரியில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.