42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி!
42 ஆண்டுகளுக்கு பிறகு, ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன்முறையாக மும்பையை டெல்லி தோற்கடித்துள்ளது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த டெல்லி, மும்பையை முதல் இன்னிங்சில் 293/10 என்று கட்டுப்படுத்தியது. மறுபுறம் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை குவிக்க, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை வெறும் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 94 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு ரஞ்சி டிராபியில் இது தான் டெல்லியின் முதல் வெற்றியும் கூட.
42 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்ன?
1979-80 சீசனில், புதுடெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான மும்பை அணியை பிஷன் சிங் பேடி தலைமையிலான டெல்லி அணி வீழ்த்தியுள்ளது. அந்த சீசனில் கோப்பையையும் கைப்பற்றியது. அதன் பிறகு பலமுறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதினாலும், டெல்லி அணியால் மும்பை அணியை ஒருமுறை கூட வீழ்த்த முடியவில்லை. அதே சமயம் மும்பையிடம் வீழ்ந்தாலும், டெல்லி 80-81, 81-82, 83-84, 84-85, 85-86, 86-87, 88-89, மற்றும் 89-90 சீசன்களில் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதோடு, இதில் 3 முறை கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி புதிய வரலாறு படைத்துள்ளது.