ரஞ்சி கோப்பை 2022-23 : உத்தரகாண்டை வீழ்த்தி அரையிருதிக்கு முன்னேறியது கர்நாடகா!
2022-23 ரஞ்சி டிராபியின் காலிறுதியில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியுடன் கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவின் வெற்றிக்கு முரளிதர வெங்கடேஷ் மற்றும் ஷ்ரேயாஸ் கோபால் முக்கியப் பங்காற்றினர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது. உத்தரகாண்ட் முதல் இன்னிங்ஸில் 116 ரன்களுக்கு சுருண்ட நிலையில், கர்நாடகா 606 ரன்களை குவித்தது. கர்நாடக அணியின் முதல் நான்கு வீரர்கள் அரை சதம் அடித்த நிலையில் ஷ்ரேயாஸ் சதமடித்தார். உத்தரகாண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் 209 ரன்களில் சுருண்டு தோல்வியைத் தழுவியது. கர்நாடகாவின் முரளிதர வெங்கடேஷ் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முதல் தர கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த ஷ்ரேயாஸ் கோபால்
ஷ்ரேயாஸ் கோபால் உத்தரகாண்டுக்கு எதிராக 288 பந்துகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 161 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மேலும் இதன் மூலம் கோபால் முதல் தர கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார். 75 போட்டிகளில் விளையாடி அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும். உத்தரகாண்டுக்கு எதிரான போட்டியில் எடுத்த 161 ரன், இப்போது சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அவரது சிறந்த ஸ்கோர் ஆக உள்ளது. உத்தரகாண்டுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோபால் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.