912 வாரங்களுக்கு பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரஃபேல் நடால்
இந்தியன் வெல்ஸில் ரஃபேல் நடால் பங்கேற்காததால், 2005க்கு பிறகு முதல் முறையாக உலக டென்னிஸ் தரவரிசையில், முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால், கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனின் இரண்டாவது சுற்றில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், கலிபோர்னியாவில் நடந்த ஏடிபி மாஸ்டர்ஸ் 1,000 போட்டியான இந்தியன் வெல்ஸ் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால் நடால் தரவரிசையில் நான்கு இடங்கள் சரிந்து 13வது இடத்தைப் பிடித்தார்.
மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைவாரா ரஃபேல் நடால்?
தற்போதைய நம்பர் ஒன் வீரரான கார்லோஸ் அல்கராஸுக்கு இரண்டு வயது கூட இல்லாதபோது, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த நடால், 912 வாரங்கள் அதை தக்க வைத்திருந்தார். இருப்பினும், நடால் தனது வாழ்க்கையில் 14 முறை வென்ற பிரெஞ்சு ஓபனுக்கு முன்னதாக அடுத்த மாதம் மான்டே கார்லோ மாஸ்டர்ஸில் மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளதால், தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் விளையாட்டிலிருந்து வெளியேறியபோது டென்னிஸ் அதன் இரண்டு சிறந்த வீரர்களை இழந்தது. ஆனால் நடால் மற்றும் போட்டியாளரான நோவக் ஜோகோவிச் இன்னும் களத்தில் உள்ளனர்.