கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை: ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி சாம்பியன்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 21 வயதான இள இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இறுதிப்போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் பிரக்ஞானந்தா கணிசமான பின்னடைவைச் சந்தித்தார். முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்து, இரண்டாவது ஆட்டத்தை டிராவில் முடித்ததால் 3-9 என்ற புள்ளிக் கணக்கில் கருவானாவை விட 6 புள்ளிகள் பின் தங்கியிருந்தார். இதன் பிறகு அபாரமாக மீண்டு வந்த பிரக்ஞானந்தா, ரேபிட் பிரிவின் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளைச் சேர்த்து 11-9 என முன்னிலை பெற்றார்.
பிளிட்ஸ் பிரிவு
விறுவிறுப்பான பிளிட்ஸ் பிரிவு
பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இரண்டாவது ஆட்டத்தில் கருவானா வெற்றி பெற, இரு வீரர்களின் புள்ளிகளும் 12-12 எனச் சமநிலையை எட்டின.
அதன்பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா கருவானாவை வீழ்த்தி 14-12 என்ற புள்ளிக் கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றார்.
இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு முழுமையாக இருந்தபோதிலும், திரீஃபோல்ட் ரிப்பிட்டீஷன் முறையில் ஆட்டத்தை டிராவில் முடித்து ஒட்டுமொத்தப் போட்டியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைச் சொந்தமாக்கினார்.
நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்திப் பட்டம் வென்றது, செயின்ட் லூயிஸ் மற்றும் சிங்க்ஃபீல்ட் கப் தொடர்களில் சிறப்பான செயல்பாடு எனத் தொடர்ந்து அபார படிநிலைகளை கடந்து சாதனை படைக்கிறார் பிரக்ஞானந்தா.