பவர்பிளேயில் களமிறங்கும் தல தோனி; அஸ்வின் சொன்ன அந்த ஒரு விஷயம்; சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது முழுநேர வர்ணனையாளராக மாறியுள்ள அஸ்வின், தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசியுள்ளார்.
3வது இடம்
3வது இடத்தில் தோனி?
ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் தோனி ஏற்கனவே தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்ட நிலையில், அஸ்வின், "தோனி மிகவும் உடற்தகுதியுடன் காணப்படுகிறார். அவர் 9வது இடத்தில் களமிறங்குவார் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த முறை பவர்பிளேயின் போதே 3வது வீரராகக் களமிறங்கி, அதிரடி காட்டும் ஒரு என்போர்சர் பாத்திரத்தை அவர் ஏற்பார் என்று நினைக்கிறேன்." எனக் கூறினார். மேலும், 40 வயதைக் கடந்தும் விளையாடும் இம்ரான் தாஹிரைப் பார்த்து தோனி உற்சாகம் அடைந்திருக்கலாம் என்றும் அஸ்வின் விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்கள்
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
எம்எஸ் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஒரு சிறந்த ஃபினிஷராகவே அறியப்படுகிறார். ஆனால், 3வது இடத்தில் இதுவரை 8 முறை மட்டுமே விளையாடியுள்ளார். கடைசியாக 2022 இல் 3வது இடத்தில் களமிறங்கினார். அந்த இடத்தில் 196 ரன்களை 124.84 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இது தோனியின் வழக்கமான அதிரடியை விடக் குறைவு என்றாலும், தற்போதைய பயிற்சியைப் பார்க்கும்போது அவர் புதிய வியூகத்துடன் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையாக இருப்பதாக அஸ்வின் பாராட்டியுள்ளார். பேட்டிங் வரிசையில் ஒரு அதிரடிப் பட்டாளமே அணியில் உள்ளதால், 200 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தாலும் மற்ற அணிகள் சிஎஸ்கேவை தடுப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.