இல்லத்தரசி டு பாடிபில்டர் : 41 வயதில் தேசிய சாம்பியனான பிரதிபா தப்லியால்!
உத்தரகாண்டில் உள்ள பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இல்லத்தரசியான பிரதிபா தப்லியால், 13வது தேசிய சீனியர் பெண்கள் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றுள்ளார். அவர் 15 மற்றும் 17 வயதில் உள்ள இரண்டு மகன்களுக்கு தாயாக உள்ளார். பிரதிபா உடற்பயிற்சி செய்ய தொடங்கி வெறும் இரண்டே ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் இது அவருக்கு பாடிபில்டிங்கில் இரண்டாவது போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிபா இதற்கு முன்னர் 2022 இல் தனது முதல் போட்டியில், உத்தரகாண்டின் முதல் பெண் தொழில்முறை பாடிபில்டராக பங்கேற்று நான்காவது இடத்தைப் பிடித்தார்.
கணவரின் உந்துசக்தியால் பாடிபில்டிங்கில் சாதனை
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், தைராய்டு பிரச்சினை காரணமாக மருத்துவர் ஆலோசனையின் பேரில், கணவர் பூபேஷ் உடன் ஒரு ஜிம்மில் சேர்ந்ததாகவும், சில மாதங்களில் 30 கிலோவைக் குறைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பாடிபில்டிங் ஆரம்பித்ததபோது, அதற்காக அணிய வேண்டிய ஆடைகள் காரணமாக கூச்சப்பட்டதோடு, அக்கம்பக்கத்தினரின் கேலிப்பேச்சுக்கு ஆளானதாகவும் கூறினார். ஆனால் தற்போது தங்கம் வென்ற பிறகு அவர்களின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது என மேலும் தெரிவித்துள்ளார். தனக்கு இதிலெல்லாம் முதலில் ஆர்வம் இருந்ததில்லை என்றும், முழுக்க முழுக்க கணவரின் ஊக்கத்தால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாக கூறினார். தேசிய போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு, அவர் இப்போது ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராக உள்ளார்.