பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய வீரர்களை அனுமதிக்கக் கூடாது! ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு!
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரைன், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்குப் பிறகு முதல் உச்சிமாநாட்டை நடத்தியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்களை விளையாட்டு உலகில் மீண்டும் பங்கேற்க அனுமதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. முன்னதாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) ரஷ்ய மற்றும் பெலாரஷிய விளையாட்டு வீரர்கள் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிட அனுமதிக்க விரும்புவதாக அறிவித்தது. பாஸ்போர்ட் காரணமாக எந்த விளையாட்டு வீரரும் போட்டியிடுவதைத் தடுக்கக்கூடாது என்று ஐஓசி தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளன.
ரஷ்ய வீரர்கள் பங்கேற்பை எதிர்க்க காரணம் என்ன?
போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்கள் கூட்டறிக்கையில், "நடுநிலை கொடியின் கீழ் விளையாட வைக்கும் முயற்சிகள், உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து திசைதிருப்பும் வகையில் இருப்பதோடு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அங்கீகரிக்கும் வகையில் உள்ளது." என குற்றம் சாட்டியுள்ளன. இதே போல் உக்ரைனும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களை எந்த வகையில் அனுமதித்தாலும், தாங்கள் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என எச்சரித்துள்ளது. இதற்கிடையே போலந்து விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் கமில் போர்ட்னிசுக் தனியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிப்ரவரி 10ம் தேதி நடைபெறும் ஐஓசி கூட்டத்திற்கு முன், 40 நாடுகள் வரை ரஷ்ய வீரர்கள் பங்கேற்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.