பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைத்த மனு பாக்கருக்கு பிரதமர் வாழ்த்து
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஹரியானாவைச் சேர்ந்த 22 வயதான மனு பாக்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார். அபினவ் பிந்த்ரா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் குமார் மற்றும் ககன் நரங் ஆகியோருக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ளது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து
"ஒரு வரலாற்றுப் பதக்கம் இது! நன்றாக விளையாடினீர்கள், மனு பாக்கர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்ததற்குநன்றி! வெண்கலத்திற்கு வாழ்த்துகள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றதால், இந்த வெற்றி இன்னும் சிறப்பு வாய்ந்தது. நம்பமுடியாத சாதனை !," என பிரதமர் மோடி X இல் பதிவிட்டுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் மனு பாக்கருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். "பாரீஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அவரது சாதனை பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று குடியரசு தலைவர் கூறியுள்ளார்.