இந்தியா vs ஆஸ்திரேலியா: இன்றைய நான்காவது டி20 போட்டிக்கான முன்னோட்டம்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற, கிளென் மேக்ஸ்வெல்லின் அபார சதத்துடன் மூன்றாவது டி20 போட்டியை வென்றது ஆஸ்திரேலியா. இந்நிலையில், இரு அணிகளும் இன்று நான்காவது டி20 போட்டியில் மோதவிருக்கின்றன. இன்றைய போட்டியை வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், இந்தியாவைத் தோற்கடித்து தொடரை சமன் செய்யும் வெறியுடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கவிருக்கின்றன. இன்றைய போட்டியானது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷாகீத் வீர் நாராயண் சிங் சர்சவதேச அரங்கில் நடைபெறவிருக்கிறது. மேலும், சர்வதேச டி20 போட்டி ஒன்று இந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
நான்காவது டி20 போட்டி: பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
கடந்த இரண்டு நாட்களாக ராய்பூரில் மழை பெய்து வந்தாலும், இன்றைய வானிலை அறிக்கை போட்டி நடப்பதற்கு சாதகமாகவே இருக்கிறது. மழை பெய்யும் வாய்ப்புகள் மிகக் குறைவே. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு ஆறு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த ஆறு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. மேலும், இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ரன்ரேட் 7.48 ஆக இருக்கிறது. டீசன்டான பவுண்ஸைக் கொண்டிருக்கும் இந்த மைதானத்தில், அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களால் பேட்டர்களை சற்று கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது.