வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் வீரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஊதிய உயர்வை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்களுக்கான புதிய மத்திய ஒப்பந்தத்தில் வெளிநாட்டு டி20 போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பது குறித்தும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த முறை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள், டி20 கிரிக்கெட் அடிப்படையில் வீரர்களை பிரித்து ஒப்பந்தம் வழங்கிய நிலையில், அதை நீக்கி, புதிய ஒப்பந்த முறை கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி முன்பு அமலில் இருந்த பிரிவு ஏ, பி, சி மற்றும் டி என்ற நான்கு பிரிவுகளாக மீண்டும் வீரர்களை பிரிக்க உள்ளது.
வெளிநாட்டு பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்க வீரர்களுக்கு கட்டுப்பாடு
பாபர் ஆசம், ஷஹீன் அப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் போன்றவர்கள் இடம்பெறும் ஏ பிரிவு வீரர்களுக்கு இந்திய மதிப்பில் மாதந்தோறும் சுமார் 13 லட்சம் ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக, ஈஎஸ்பிஎன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பி பிரிவு வீரர்கள் 8.75 லட்சம், சி மற்றும் டி பிரிவில் உள்ள வீரர்கள் முறையே 2 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை பெறுவார்கள். இதற்கிடையே, ஏ மற்றும் பி பிரிவு வீரர்கள் ஒரு வருடத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தவிர வேறு ஒரு லீக் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதர பிரிவில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட லீக்கில் பங்கேற்க அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.