ஐபிஎல்லுக்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறக்கணிக்கும் தென்னாப்பிரிக்க வீரருக்கு லீகல் நோட்டீஸ்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கோர்பின் போஷுக்கு தனது ஒப்பந்தக் கடமைகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2025 பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக (பிஎஸ்எல்) பெஷாவர் சல்மியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட கோர்பின் போஷ், காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸுக்கு மாற்றாக இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2025) விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பிஎஸ்எல்லை விட்டு, ஐபிஎல்லில் விளையாட அவர் முடிவு செய்த நிலையில், பிசிபி லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோர்பின் போஷின் முகவர் மூலம் வழங்கப்பட்ட பிசிபியின் நோட்டீஸ், பிஎஸ்எல் உறுதிமொழிகளில் இருந்து விலகுவதற்கான நியாயமான காரணத்தை தெரிவிக்க வேண்டும் வேண்டும், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்
ஒரே நேரத்தில் நடக்கும் ஐபிஎல், பிஎஸ்எல்
வழக்கமாக பிப்ரவரி - மார்ச் காலப்பகுதியில் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாக நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் அட்டவணை இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி இதே காலகட்டத்தில் நடத்த வேண்டி இருந்ததால், இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு மத்தியில் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடக்கிறது.
ஐபிஎல் மிக அதிக மதிப்புள்ள போட்டி என்பதால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்கு விளையாட நட்சத்திர வீரர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்கிடையே, எஸ்ஏ20 இல் எம்ஐ கேப் டவுனுக்காக விளையாடிய கோர்பின் போஷ், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட உள்ளார்.
லீகல் நோட்டீஸால் அவர் மும்பை இந்தியன்ஸில் விளையாடுவதில் சிக்கல் இல்லை என்றாலும், அவர் பிசிபிக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.