சாம்பியன்ஸ் டிராபி மைதானத்தில் இந்திய கொடி இல்லாததால் சர்ச்சை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்திய தேசியக் கொடி காணப்படாதது சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக ஐசிசி போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் மைதானத்தில் பறக்கவிடப்படும்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் கராச்சி தேசிய மைதானத்தின் கூரையில் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் ஏற்றப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதில் மற்ற நாட்டு கொடிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தியாவின் கொடி இல்லாதது சர்ச்சையைக் கிளப்பியது.
விளக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணி தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட முடிவு செய்ததால் கொடியை வைக்கவில்லை என ஊகங்கள் எழுந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டி நாட்களில் நான்கு கொடிகளை மட்டுமே காட்ட அறிவுறுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதன்படி, ஐசிசி கொடி, போட்டியை நடத்தும் நாடாக பாகிஸ்தானின் கொடி மற்றும் போட்டியிடும் இரண்டு அணிகளின் கொடிகள் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளது.
இரு நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு இந்த விளக்கம் வந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19 அன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.