சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் திடீர் பயணம்: ஆஸ்திரேலியா திரும்பியது ஏன்? மீண்டும் எப்போது வருவார்?
செய்தி முன்னோட்டம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது முதுகு காயத்திற்கான இறுதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் கம்மின்ஸ், டி20 உலகக்கோப்பை உட்படப் பல முக்கியத் தொடர்களில் பங்கேற்கவில்லை. கடந்த டிசம்பரில் நடந்த ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடியிருந்தார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டங்களுக்கு முன்பே தான் முழுமையாகக் குணமடையவில்லை என்பதையும், தொடரின் இடையில் தான் அணியில் இணைவேன் என்பதையும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி அவர் நாடு திரும்பியுள்ளார்.
தற்காலிக மாற்றங்கள்
இஷான் கிஷன் தலைமையில் எஸ்ஆர்எச்
பேட் கம்மின்ஸ் இல்லாத சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தற்காலிக கேப்டனாக நட்சத்திர வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணையாக அபிஷேக் சர்மா துணை கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். கம்மின்ஸ் ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த கேப்டன் என்பதால், அவரது இல்லாமை அணியின் பந்துவீச்சு மற்றும் வியூகங்களில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சமாளிக்கப் பந்துவீச்சுத் துறையில் ஈஷான் மலிங்கா மற்றும் டேவிட் பெயின் ஆகியோரை அணி நிர்வாகம் முன்னிறுத்தியுள்ளது. கம்மின்ஸ் ஏப்ரல் 17 அன்று மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்குள் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய அணிகளுக்கு எதிரான போட்டிகளை இஷான் கிஷன் தலைமையிலான படை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மீண்டு வருவாரா?
கம்மின்ஸின் திட்டமிடலும் மீண்டு வருதலும்
தனது காயம் குறித்துப் பேசியிருந்த பேட் கம்மின்ஸ், ஐபிஎல் தொடரின் தொடக்கக் கட்டத்தைத் தவறவிடுவது வருத்தமளித்தாலும், தொடரின் முக்கியமான நடுக்கட்டத்தில் முழு உடற்தகுதியுடன் திரும்புவதையே இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ள அவர், ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்படும் இந்த இறுதி ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ் பெற்றவுடன் ஹைதராபாத் முகாமுக்குத் திரும்புவார். ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த போட்டிகளில் கம்மின்ஸின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அடுத்த கட்டம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் அடுத்தகட்ட நகர்வுகள்
ஏப்ரல் 17 ஆம் தேதி கம்மின்ஸ் திரும்பும் வரை, அணியின் வேகப்பந்து வீச்சுத் துறையை நிலைநிறுத்துவது இஷான் கிஷனுக்கு ஒரு சவாலான பணியாக இருக்கும். பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராகப் போராடிய எஸ்ஆர்எச் அணி, ஞாயிற்றுக்கிழமை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது. கம்மின்ஸ் திரும்பியவுடன் அவர் மீண்டும் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்பதால், அதுவரை புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நிர்வாகத்தின் தற்போதைய திட்டமாகும். கம்மின்ஸின் அனுபவம் மற்றும் பந்துவீச்சுத் திறன் தொடரின் பிற்பாதியில் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.