Loading...
பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டி: ஷதாப் கான் LBW சர்ச்சை, DRS திருப்பத்தால் பாகிஸ்தான் வெற்றி
முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டி மீண்டும் தொடங்கி பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டி: ஷதாப் கான் LBW சர்ச்சை, DRS திருப்பத்தால் பாகிஸ்தான் வெற்றி

எழுதியவர் Vasuki
Oct 26, 2026
03:44 pm

செய்தி முன்னோட்டம்

லாகூரில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எதிர்பாராத DRS சர்ச்சை வெடித்தது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தபோது, அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஷதாப் கான் கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்ததாக கள நடுவர் தீர்ப்பளித்தார். போட்டி முடிந்துவிட்டதாகக் கருதி இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். நேரலை ஒளிபரப்பிலும் இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது நடுவரின் மறுஆய்வில் பந்து பேட்டின் உள்விளிம்பில் பட்டது அல்ட்ரா எட்ஜ் மூலம் உறுதியானதால், ஆட்டம் மீண்டும் தொடங்கும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

டிஆர்எஸ்

டிஆர்எஸ் சர்ச்சை மற்றும் வீடியோ விளக்கம்

கள நடுவர் அவுட் கொடுத்தவுடன் விரக்தியடைந்த ஷதாப் கான் தனது பேட்டைத் தரையில் அடித்தபடி இங்கிலாந்து வீரர்களுக்குக் கைகுலுக்கச் சென்றதால், அவர் எப்போது DRS கேட்டார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்தது.

நேரலையின் ஆரம்பக் காட்சிகளில் அவர் ரிவியூ கேட்டது சரியாகத் தெரியாததால் சர்ச்சை தீவிரமடைந்தது.

எனினும், மற்றொரு கோணத்தில் வெளியான வீடியோ பதிவில், அணியிடம் ஒரு ரிவியூ எஞ்சியிருந்ததால் நம்பிக்கையற்ற நிலையிலும் ஷதாப் கான் டிஆர்எஸ் கோரியது தெளிவாகத் தெரிந்தது.

இதன் மூலம் நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டு, ஆட்டம் மீண்டும் பாகிஸ்தானின் பக்கம் திரும்பியது.

9 விக்கெட்டுகள்

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

முன்னதாக 154 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்ற பாகிஸ்தான் அணியை, 10-வது விக்கெட்டுக்கு ஹாரிஸ் ராவுஃபுடன் (19 பந்துகளில் 7 ரன்கள்) இணைந்து ஷதாப் கான் அபாரமாக வழிநடத்தினார்.

பொறுப்புடன் ஆடிய ஷதாப் கான் 96 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT