ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க பாகிஸ்தான் முடிவு
ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் தொடங்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 21 வயதான தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பை பாகிஸ்தான் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவமிக்க தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக்கின் மோசமான ஆட்டத்தை அடுத்து அவரது மெதுவான பேட்டிங் விமர்சனத்திற்கு உள்ளானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில், அணி நிர்வாகம் இறுதியாக அயூப்பிறகு ஒரு வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் பரிதாபகரமான தோல்வியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சைம் அயூப் பின்னணி
கராச்சியை சேர்ந்த சைம் அயூப் இந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக எட்டு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரெட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, வெறும் 14 முதல் தர போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இந்த வடிவத்தில் அவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மேலும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்காத நிலையிலும், பாகிஸ்தான் பேட்டிங் போராடி வருவதாலும், அணி நிர்வாகம் அயூப்பிறகு ஒரு வாய்ப்பை வழங்கத் தயாராக உள்ளது. இதற்கிடையே, காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத மர்ம சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது குணமாகி வராமல் இருந்தால், ஆஃப் ஸ்பின்னர் சஜித் கானுக்கு வாய்ப்பளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.