ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வீரர் நோமன் அலி நீக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நோமன் அலி, கடுமையான குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இடது காய் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி, திடீரென மற்றும் தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்கேன் பரிசோதனையில் குடல் அழற்சி உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு சனிக்கிழமை (டிசம்பர் 23) லேப்ராஸ்கோபிக் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருக்கிறார். இன்று பிற்பகலுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவித்துள்ளது.
பரிதாப நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
நோமன் அலி பாகிஸ்தான் அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 47 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு முறை நான்கு விக்கெட்டுகளையும் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நோமனின் நிலை பாகிஸ்தானின் பந்துவீச்சை சீர்குலைத்துள்ளது. அவரது சக சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏற்கனவே சிகிச்சையில் உள்ளார். மறுபுறம், முதல் டெஸ்டின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாஜாத், அவரது விலா எலும்புகளில் அழுத்த முறிவு மற்றும் அடிவயிற்று தசைகள் கிழிந்ததால், நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக தோற்ற பாகிஸ்தான் அணிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.