இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்!
2012 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இதே நாளில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். வங்கதேசத்தில் நடந்த 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இந்த போட்டியில் விளையாடினார். அதன் பிறகு டிசம்பர் 23, 2012 அன்று ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சச்சின் தனது கடைசி ஒருநாள் போட்டியில் 52 ரன்கள் எடுத்தாலும், இந்த தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதத்தை பதிவு செய்தது எப்போதும் நினைவுகூரப்படும். இந்த போட்டியில் தான் கோலி தனது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரையும் அடித்தார் என்பது கூடுதல் தகவல்.
சச்சினின் கடைசி ஒருநாள் போட்டியின் முழு விபரம்
வங்கதேசத்தின் மிர்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது. 330 ரன்கள் எனும் சவாலான இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக சச்சின் கோலியுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். டெண்டுல்கர் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோலி ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு உதவினார். கோலி இந்த போட்டியில் 183 ரன்கள் குவித்த நிலையில் அது தற்போது வரை அவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.