இதே நாளில் அன்று : 2009இல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்
கிரிக்கெட் உலகின் இருந்த நாட்களில் ஒன்றாக கருதப்படும் சம்பவம் 2009 ஆம் ஆண்டில் இதே நாளில் (மார்ச் 3) தான் அரங்கேறியது. பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணி முதலில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தது. ஆனால் 2008 நவம்பர் 26இல் மும்பை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பிசிசிஐ சுற்றுப்பயணத்தை ரத்து செய்த பின்னர் இலங்கை பாகிஸ்தானுக்கு சென்றது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச அணிகளுக்கு பாதுகாப்பு எப்போதுமே கேள்விக்குறியாகவே இருந்த போதிலும், இலங்கை கிரிக்கெட் அணியின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலால் 2011 உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடமிருந்து ஐசிசி பறித்தது.
2009 தாக்குதல் : நடந்தது என்ன?
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுதம் ஏந்திய 12 பேர் பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆறு பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உலகமே இதைக்கேட்டு அச்சத்தில் ஆழ்ந்த நிலையில, பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக அனைத்து வீரர்களையும் இலங்கைக்கு பத்திரமாக அனுப்பி வைத்தது. இதையடுத்து பல வருடங்கள் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் செல்லாத நிலையில், 2015க்கு பிறகு தான் நிலைமை சற்று மாறத்தொடங்கியது. மேலும் 2019 இல் தான் இலங்கை பாகிஸ்தானுக்கு மீண்டும் சென்று விளையாடியது.