இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம்
2005 ஏப்ரல் 5 அன்று இதே நாளில் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2005இல் இதே நாளில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் களமிறங்கினர். நான்காவது ஓவரில் சச்சின் அவுட்டான நிலையில் ஒன் டவுனாக எம்.எஸ்.தோனி களமிறங்கினார். தோனி, சேவாக்குடன் இணைந்து பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தனர். இருவரும் சேர்ந்து கூட்டாக 96 ரன்கள் எடுத்தனர். சேவாக் 74 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
சதமடித்த எம்.எஸ்.தோனி
அடுத்து வந்த கங்குலி சொற்ப ரன்களில் வெளியேற, "இந்திய கிரிக்கெட்டின் சுவர்" என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் தோனியுடன் ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் சுவர் போல் டிராவிட் நிலைத்து நிற்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய தோனி, 123 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 148 ரன்கள் குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்த நிலையில், பாகிஸ்தான் 298 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.