அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை : ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 46 நாட்கள் விளையாடப்படும் இந்த தொடரில் 48 போட்டிகள் விளையாடப்படும். ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போ கூற்றுப்படி, இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த மொத்தம் 12 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் தவிர, பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
மைதானங்களை இறுதி செய்வதை தாமதப்படுத்தும் பிசிசிஐ
ஐசிசி பொதுவாக உலகக் கோப்பை அட்டவணையை குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே உறுதி செய்தாலும், பிசிசிஐ எந்த விளையாட்டுகளுக்கான இடங்களையும் இறுதி செய்யவில்லை. இந்திய அரசாங்கத்தின் தேவையான அனுமதிகள் மற்றும் பருவமழையின் அடிப்படையில் மைதானங்களை தேர்வு செய்வது பற்றிய தெளிவான அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்வதற்காக பிசிசிஐ தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இவை தவிர போட்டிகளுக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு பெறுவது மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பங்கேற்பில் உள்ள சிக்கலும் தாமதப்படுத்துவதற்கான மற்ற இரண்டு காரணங்கள் ஆகும். இந்தியா கடைசியாக 2011இல் வங்கதேசம் மற்றும் இலங்கையுடன் சேர்ந்து ஒருநாள் உலகக்கோப்பையை நடத்தியது. இதில் இந்தியா 1983க்கு பிறகு தோனி தலைமையில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.