நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வெளியேறிய மேட் ஹென்றிக்கு மாற்று வீரர் அறிவிப்பு
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடாமல் இருந்து வரும் நிலையில், அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளரான மேட் ஹென்றியும் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி. தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியின் போது மேட் ஹென்றியின் வலது பக்க தொடை எழும்பில் காயம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இருந்து அவர் வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறது நியூசிலாந்து. இந்த காயத்திலிருந்து மீள்வதற்கு அவருக்கும் நான்கு முதல் ஆறு வார கால ஓய்வும் சிகிச்சையும் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மாற்று வீரர் அறிவிப்பு:
உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியிருக்கும் மேட் ஹென்றிக்கு மாற்றாக கைல் ஜேமிசனை அறிவித்திருக்கிறது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணிக்காக 13 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் கைல் ஜேமிசன், 5.08 என்ற எக்கானமியோடு 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். இவரும் சமீப காலமாக காயம் காரணமாக அவதிப்பட்டு, தற்போது மீண்டு வந்திருக்கிறார். முக்கியமான பந்துவீச்சாளர் ஒருவரை இழந்திருக்கும் இந்த நேரத்தில், ஜேமிசனைப் போன்று சிறப்பான பந்துவீச்சாளர் கைவசம் இருப்பது அதிர்ஷ்டம் தான் என கைல் ஜேமிசன் உலகக்கோப்பை தொடருக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட்.