ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானிலிருந்து இடமாற்றம் செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயார்
ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற நிலைப்பாட்டை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. பஹ்ரைனில் சனிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு செல்வதற்கு இந்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியாது என்று பிசிசிஐ, இதற்கான காரணமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், ஆசிய கோப்பையை நடத்துபவர்கள் குறித்து முடிவு எடுக்க ஏசிசி நிர்வாக குழு முடிவு செய்தது. அடுத்த மாதம் குழு மீண்டும் கூடும் போது ஏசிசி இடமாற்றம் பற்றி விவாதிக்கும்.
ஆசிய கோப்பை நடத்த வாய்ப்புள்ள இடங்கள்
ஏசிசியின் தலைவராகவும் உள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பாது என்று முன்னதாக கூறியிருந்தார். பிசிபி நடத்தும் நாடாக இருந்து கொண்டு, மற்றொரு நாட்டில் வைத்து விளையாடுவதில் பிசிசிஐக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறப்படுகிறது. பிசிபி இந்த ஏற்பாட்டின்படி போட்டியை நடத்த ஒப்புக்கொண்டால், அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவில் வைத்தது போட்டியை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்து ஜெய் ஷா பிசிபியின் புதிய தலைவரான நஜாம் சேத்தியிடம் பேசியதாக தெரிகிறது. முன்னதாக, பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.