'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு
யுவராஜ் சிங் ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காவது இடத்தில் விளையாட சரியான பேட்டர் யாரும் அமையவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார். ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோஹித் ஷர்மாவின் இந்த வெளிப்படையான பேச்சு அணியில் உள்ள தீவிர பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். மிகவும் முக்கியமான ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்தியா நம்பர் 4 இடத்திற்கான பேட்டரைக் கண்டுபிடிக்க போராடுகிறது. முன்னதாக 2019இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும், இது முக்கிய பிரச்சினையாக இருந்தது.
ரோஹித் ஷர்மா பேசியதன் முழு விபரம்
மும்பையில் நடந்த லா லிகா நிகழ்வின் மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் ஷர்மா, "நம்பர் 4 எங்களுக்கு நீண்ட நாளாக ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. யுவராஜ் சிங்கிற்கு பிறகு யாரும் அந்த இடத்தில் நீண்டகாலமாக யாரும் சரியாக அமையவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையில் நம்பர் 4 இல் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காயம் காரணமாக சிலகாலமாக வெளியே இருக்கிறார். கடந்த 4-5 ஆண்டுகளிலும் இதுதான் நடந்தது. நம்பர் 4 இடத்திற்கு சிறப்பாக விளையாடும் பலர் வந்தாலும், அவர்களில் நிறைய பேர் காயம் அடைந்துள்ளனர்." என்று கூறினார். மேலும், முக்கிய வீரர்கள் பலரும் கடந்த 4-5 ஆண்டுகளில் அடிக்கடி காயம் அடைவதும் அணிக்கு பின்னடைவாக இருந்து வருவதாகக் கூறினார்.