ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதம் : நிக்கோலஸ் பூரன் சாதனை
பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) நடந்த 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் 15வது போட்டியில் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) 213 ரன்களை சேஸ் செய்தது. கடினமான இலக்கை எதிர்கொண்ட எல்எஸ்ஜியின் டாப் ஆர்டர் பேட்டிங் மளமளவென சரிந்த நிலையில், நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக அரைசதத்தை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். 15 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பூரன் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் எடுத்தார். முன்னதாக, மார்கஸ் ஸ்டோனிஸும் விரைவாக ரன் சேர்க்க எல்எஸ்ஜி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள்
ஐபிஎல் வரலாற்றில் 2018இல் கே.எல்.ராகுல் 14 பந்துகளில் அரைசதம் எட்டியதே அதிவேக அரைசதமாக உள்ளது. 2022இல் பாட் கம்மின்ஸ் இதை சமன் செய்தார். 2014இல் யூசுப் பதான் மற்றும் 2017இல் சுனில் நரேன் 15 பந்துகளில் அரைசதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது நிக்கோலஸ் பூரான் 15 பந்துகளில் அரைசதம் எட்டி யூசுப் பதான் மற்றும் சுனில் நரேனின் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கிடையே, ஐபிஎல் இன்னிங்ஸில் (50+ ரன்கள்) நான்காவது அதிக ஸ்ட்ரைக் ரேட்டை நிக்கோலஸ் பூரன் பதிவு செய்தார் பூரன். 19 பந்துகளில் 62 ரன்களை 326.32 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். கம்மின்ஸ், ரெய்னா மற்றும் யூசுப் பதான் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.