இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் ஹென்றி ஷிப்லி அசத்தல்
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹென்றி ஷிப்லி 31 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், நியூசிலாந்து அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், ஷிப்லி தனது நான்காவது ஒருநாள் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய 27வது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஹென்றி ஷிப்லியின் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
ஷிப்லி தற்போது நான்கு ஒருநாள் போட்டிகளில் 6 என்ற எகானாமியில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 43 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிப்லிக்கு, லிஸ்ட்-ஏ'வில் இது இரண்டாவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும். லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் மொத்தமாக 46 விக்கெட்டுகளை வைத்துள்ளார். மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஷிப்லியின் 5/31 இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து பந்துவீச்சாளரின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சாகும். 1983 பிரிஸ்டல் ஒருநாள் போட்டியில் 5/25 என்ற கணக்கில் ரிச்சர்ட் ஹாட்லீ மட்டுமே இந்த விஷயத்தில் ஷிப்லியை விட முன்னிலையில் உள்ளார்.