INDvsNZ 2வது டெஸ்ட்: இந்தியாவின் 23 ஆண்டு வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் நாளிலேயே, முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில், தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி, போட்டியின் இரண்டாம் நாளில் 156 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றது.
103 ரன்கள் முன்னிலையுடன் புதிய சாதனை
முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலையுடன், 2001 முதல் இந்தியாவில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற முதல் அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. முன்னதாக, பெங்களூருவில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், 2001இல் ஆஸ்திரேலியா மும்பை வான்கடே மைதானத்தில் 173 ரன்கள் முன்னிலை பெற்றதோடு, அடுத்து ஈடன் கார்டனில் 274 ரன்கள் முன்னிலை பெற்றபோது, கடைசியாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் சிறப்புத் தொடரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
டெஸ்ட் தொடர் வெற்றிக்கும் முடிவு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இப்போது இந்தியா உள்நாட்டில் பெற்றுள்ள 18 டெஸ்ட் தொடர் வெற்றி வரலாற்றையும் முடிவுக்குக் கொண்டுவரும் விளிம்பில் உள்ளது. இந்தியா கடைசியாக 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பிறகு, 18 தொடர்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றது. கடந்த 12 ஆண்டுகளில் ஐந்து டெஸ்ட் மேட்ச்களில் இந்தியா தோல்வியடைந்தாலும், இந்த காலகட்டத்தில் ஒரு தொடரையும் இழந்ததில்லை. இந்நிலையில், தற்போதைய போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்னும் நடந்துகொண்டிருந்தாலும், ஒவ்வொரு நிமிடமும் ஆடுகளம் மோசமடைந்து வருவதால், கடைசி பேட்டிங் கடினமாக இருக்கும் எனத் தெரிகிறது. நியூசிலாந்து இதில் வென்றால், 3 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்று தொடரையும் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.