சொதப்பிய பந்துவீச்சு! நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி!
ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் நேற்று (ஜனவரி 27) நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் மற்றும் சூர்யகுமார் யாதவின் 47 ரன்கள் என அனைத்தும் வீணானது. டி20யில் இந்திய பவுலர்களின் மோசமான செயல்திறன் இந்த போட்டியிலும் தொடர்ந்துள்ளது. கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் விட்டுக்கொடுத்த 27 ரன்களே அதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.
டேவன் கான்வேயின் அசத்தல் ஆட்டம்
கான்வே இந்த போட்டியில் சிறப்பாக ஆடி 52 ரன்கள் எடுத்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது ஒன்பதாவது அரை சதமாகும். இதுவரை 36 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே 1,200 ரன்களை எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக கான்வேயின் இரண்டாவது டி20 அரைசதம் இதுவாகும். கான்வே இப்போது டி20 கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரியை கொண்டுள்ளவர்களில் விராட் கோலிக்கு (52.73) அடுத்தபடியாக, இரண்டாவது சிறந்த பேட்டிங் சராசரியைக் (48.88) கொண்டுள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் இந்த விஷயத்தில் கான்வேக்கு (48.79) அடுத்த இடத்தில் உள்ளார்.