ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்கான தக்கவைப்பு விதிகள் வெளியானது; புதிய அம்சங்கள் என்ன?
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) மெகா ஏலத்திற்கான புதிய தக்கவைப்பு விதிகள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆறு வீரர்களை அணி உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ உறுதிப்படுத்தியது. மேலும் ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே சமயம் 2025-2027 சுழற்சியில் இம்பாக்ட் பிளேயர் விதி அமலில் இருக்கும். அணிகள் நேரடியாக ஆறு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம், தக்கவைப்பு மற்றும் ஆர்டிஎம் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தலாம் அல்லது தக்கவைக்காமல் ஆறு ஆர்டிஎம்களைப் பயன்படுத்தலாம்.
2 அன்கேப்ட் வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி
ஒரு அணி அதிகபட்சமாக 2 அன்கேப்ட் வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மீதமுள்ள கேப்ட் வீரர்கள் அனைவரும் இந்திய அல்லது வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம். புதிய விதிகளின்படி அணிகள் ரூ.120 கோடி ஏலப் பணப்பையை வைத்திருக்க அனுமதிக்கின்றன. இது முந்தைய பதிப்பை விட ரூ.20 கோடி அதிகமாகும். முதல் மூன்று வீரர்கள் ரூ.18 கோடி, ரூ.14 கோடி மற்றும் ரூ.11 கோடி பெறுவதோடு, அடுத்த இருவரை ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடிக்கு தக்கவைத்துக்கொள்ளலாம் என ஐந்து வீரர்களுக்கான தக்கவைப்பு அடுக்குகளையும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு உரிமையாளர் ஐந்து வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டால், அவர்கள் ரூ. 120 கோடி பர்ஸில் ரூ.75 கோடியை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும்.
திறமையான அன்கேப்ட் வீரர்களை தக்கவைக்க புதிய திட்டம்
அணிகள் ஒரு திறமையான இளைஞரை குறைந்த விலையில் பெற உதவும் வகையில், 4 கோடி ரூபாய்க்கு அன்கேப்ட் வீரருக்கான ஸ்லாப் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட்டையும் விளையாடாத எம்எஸ் தோனியைத் அன்கேப்ட் வீரராக தக்கவைக்க இந்த விருப்பம் நிச்சயமாக உதவும். இதற்கிடையில், 6 தக்கவைப்புகளுக்கு ரூ.79 கோடி செலவழிப்பதைத் தவிர்க்க, அணிகள் மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டுகளைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏல நிகழ்வுக்கான தேதி மற்றும் இடத்தை வரும் நாட்களில் ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.