டயமண்ட் லீக் போட்டியில் 0.01 மீட்டரில் வெற்றி வாய்ப்பை இழந்தார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சனிக்கிழமை (செப்டம்பர் 14) அன்று நடைபெற்ற 2024 டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்வு பிரஸ்ஸல்ஸில் உள்ள கிங் பாடோயின் மைதானத்தில் நடந்தது. அங்கு நீரஜ் சோப்ராவை பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் வீழ்த்தி உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கான வைல்ட் கார்டு வாய்ப்பை பெற்றார். கடுமையான போட்டி இருந்தபோதிலும், நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் 87.86 மீட்டர் பீட்டர்ஸின் வெற்றி தூரத்தை விட ஒரு சென்டிமீட்டர் குறைவாக இருந்தது. முன்னதாக, நீரஜ் சோப்ரா 86.82 மீட்டர் ஆரம்ப எறிதலுடன் வலுவாகத் தொடங்கினார். அதே நேரம் பீட்டர்ஸ் முதல் எறிதலிலேயே 87.87 மீட்டர்களுக்கு வீசினார்.
மூன்றாவது சுற்றில் மீண்ட நீரஜ் சோப்ரா
முதல் சுற்றை அடுத்து நீரஜ் சோப்ராவின் இரண்டாவது முயற்சி 83.49 மீட்டரில் தோல்வியடைந்த நிலையில், தனது மூன்றாவது முயற்சியில் 87.86 மீட்டர் மெகா த்ரோவுடன் மீண்டார். இது அவரை பீட்டர்ஸுக்குப் பின்னால் வெறும் 0.01 மீட்டர் தூரத்தில் தள்ளி, நிகழ்வு முழுவதும் முதலிடத்திற்கான போட்டியில் அவரைத் தக்கவைத்தது. இந்திய ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், சோப்ராவின் நான்காவது முயற்சி 82.04 மீட்டரில் தோல்வியடைந்தது. அவரது கடைசி இரண்டு எறிதல்கள் முறையே 83.30 மீட்டர் மற்றும் 86.46 மீட்டர் தூரத்தை மட்டுமே எட்டியது. இதனால் பீட்டர்ஸை அவரால் முறியடிக்க முடியாமல் போட்டியை இரண்டாவது இடத்துடன் முடித்தார். சமீப காலமாக இடுப்பில் பிரச்சினையுடன் போராடி வரும் நிலையிலும், நீரஜ் சோப்ரா இதில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.