யுவராஜ், தினேஷ் கார்த்திக் சாதனையை முறியடித்த நமன் தீர்: 400 ஸ்ட்ரைக் ரேட் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய இளம் ஆல்-ரவுண்டர் நமன் தீர் வெறும் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் குவித்து, முன்னாள் ஜாம்பவான்களான யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் வரலாற்று சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மழை குறுக்கிட்ட காரணத்தால் தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மைல்கல்
400 ஸ்ட்ரைக் ரேட்டுடன் புதிய சாதனை
ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து நமன் தீர், எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே பவுண்டரி, சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
வெறும் 6 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசிய அவர் 24 ரன்கள் குவித்து 400 ஸ்ட்ரைக் ரேட்டுடன் களத்தில் நின்றார்.
கிரிக்கெட்டில் குறைந்தது 5 பந்துகளை எதிர்கொண்டு இன்னிங்ஸை முடித்த இந்திய பேட்டர்களில், 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் (16 பந்துகளில் 58 ரன்கள்) மற்றும் 2018 நிதாஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் (8 பந்துகளில் 29 ரன்கள்) ஆகியோர் தலா 362.50 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்ததே சாதனையாக இருந்தது.
அதனைத் தற்போது 400 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முறியடித்து நமன் தீர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சமநிலை
முதல் 3 பந்துகளில் 16 ரன்கள்
களமிறங்கிய முதல் 3 பந்துகளிலேயே 16 ரன்களைக் குவித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஓர் இன்னிங்ஸின் முதல் 3 பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற தினேஷ் கார்த்திக்கின் முந்தைய சாதனையை (2018-ல் வங்கதேசத்திற்கு எதிராக) நமன் தீர் சமன் செய்தார்.
இதனிடையே இந்திய அணி 7.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்திருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதன் காரணமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் இடையே சமநிலையில் நிறைவடைந்தது.