காயம் காரணமாக முகேஷ் சவுத்ரி விலகல்: சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மற்றொரு பின்னடைவாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் இருந்து விலகியுள்ளார். நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் முகேஷ் சவுத்ரி, ஐபிஎல் 2022ல் சிஎஸ்கேயின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். சிஎஸ்கே அவருக்குப் பதிலாக மாற்று வீரர் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிகிறது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன், என்சிஏவில் முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு தற்போது மறுவாழ்வு பெற்று வரும் சவுத்ரி மீண்டு வருவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முகேஷ் சவுத்ரியின் புள்ளிவிபரம்
டிசம்பர் 2022 முதல் காயம் காரணமாக முகேஷ் சவுத்ரி கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2022ல் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக முகேஷ் சவுத்ரி உள்ளார். 2022 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சவுத்ரியை சிஎஸ்கே தனது அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு எடுத்த நிலையில், தனது திறமையை நிரூபித்தார். சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தாலும், அவரது பந்துவீச்சு பிரபலமடைந்தது. கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 26.5 என்ற சராசரியில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒருமுறை நான்கு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். நான்கு முறை வெற்றியாளர்களான சிஎஸ்கே, ஐபிஎல் 2023 இன் தொடக்க ஆட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.