புறக்கணிப்பு சர்ச்சையை கிளப்பிய அம்பதி ராயுடுவுக்கு எம்எஸ்கே பிரசாத் விளக்கம்
2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அம்பதி ராயுடுவின் சமீபத்திய கருத்துகளுக்கு முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் பதிலளித்துள்ளார். ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக கருதப்பட்ட அம்பதி ராயுடு, அணியில் இடம் பெறாதது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் இது குறித்து பேசிய அம்பதி ராயுடு, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதில், பிரசாத் உடனான தனது மோசமான உறவு ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். முன்னதாக, 2005 ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியபோது எம்எஸ்கே பிரசாத் உடனான கருத்து வேறுபாடுகளை ராயுடு குறிப்பிட்டு இதை தெரிவித்தார்.
ராயுடுவின் குற்றச்சாட்டுகள் குறித்து எம்எஸ்கே பிரசாத்
ராயுடுவின் கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத், வீரர்கள் தேர்வு செயல்முறை கேப்டன் உட்பட ஐந்து தேர்வாளர்கள் கொண்ட குழுவை உள்ளடக்கியது என்றும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் வீரர்களை நீக்குவது/சேர்ப்பது என்பது ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழுவின் ஒருமித்த முடிவின் மூலம் தான் எடுக்க முடியும் என்று தெரிவித்தார். 2005 சம்பவத்தை பொறுத்தவரை, தனக்கும் ராயுடுவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்றும், தனது கடுமையான கேப்டன்சி முறை குறித்து அவர் அப்படி நினைத்திருக்கலாம் என்று மேலும் கூறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அம்பதி ராயுடு, 55 போட்டிகளில் 47.05 என்ற சராசரியில் 1,694 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.