
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மீண்டும் எம்எஸ் தோனி நியமனம்; பயிற்சியாளர் பிளெமிங் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடது முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அணியின் மூத்த வீரர் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான அணியின் வரவிருக்கும் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.
"ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகினார்.
மீதமுள்ள ஆட்டங்களில் எம்எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்பார்" என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 10) சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஃப்ளெமிங் அறிவித்தார்.
காயம்
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டது எப்படி?
குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கே போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டது.
சேஸிங்கின்போது இரண்டாவது ஓவரில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து அவரது முழங்கையில் தாக்கியது.
காயம் இருந்தபோதிலும், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடினார்.
எனினும், மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ஐபிஎல் 2023இல் சிஎஸ்கே அணைப்பு பட்டம் வென்று கொடுத்ததுபோல் மீண்டும் எம்எஸ் தோனி அணிக்கு மற்றொரு பட்டத்தை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே துழுந்துள்ளது.