
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் பொறுப்பை எம்எஸ் தோனி மீண்டும் ஏற்க உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் எம்எஸ் தோனி ஏற்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் வழக்கமான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2025 இல் சேப்பாக்கத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, குவஹாத்தியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் முந்தைய போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வலது முன்கையில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவர் அந்த போட்டிக்கு பிறகு, அணியின் எந்த பயிற்சி அமர்வுகளிலும் பங்கேற்கவில்லை.
தற்காலிக கேப்டன்
தற்காலிகமாக வேறு கேப்டனை நியமிப்பது குறித்து பயிற்சியாளர் கருத்து
டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டிக்கு முந்தைய நாள் நிலைமை குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி உரையாற்றினார்.
அப்போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இன்னும் கொஞ்சம் வலி இருப்பதாகக் கூறினார். எனினும், போட்டி தொடங்கும்போது அவர் நன்றாக இருப்பார் என்று தாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில், அவர் குணமடையவில்லை என்றால் தற்காலிக கேப்டன் நியமிக்கப்படுவது குறித்து கேட்டபோது, மைக்கேல் ஹஸ்ஸி எந்த முடிவையும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், எம்எஸ் தோனியை மறைமுகமாக குறிப்பிட்டு அவர் கேப்டன்சி செய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தோனியை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் பலர் உள்ள நிலையில், அவர் மீண்டும் கேப்டன்சி செய்யும் சூழல் ஏற்பட்டால், அது ரசிகர்களுக்கு நிச்சயம் கூடுதல் குதூகலத்தை ஏற்படுத்தும்.