எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!
ஐபிஎல் 2023 இல், சென்னை சூப்பர் கிங்ஸ் புதன்கிழமை (மே 10) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது 12 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 167 ரன்களை எடுத்தது மற்றும் சேஸிங்கில் டெல்லி கேப்பிடல்ஸை 140 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், பந்துவீச்சில் மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அதிகபட்சமாக சிவம் துபே 25 ரன்களை எடுத்த நிலையில் எம்எஸ் தோனி உட்பட இதர ஐந்து பேட்டர்கள் 20 அல்லது அதற்கு மேல் எடுத்தனர். ஆனால் 25 ரன்களைக் கடக்க முடியவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு பேட்டரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது. இந்த சாதனைக்காக தோனி மகிழ்ச்சியடையாமல், தனது அணியினர் சில தவறான ஷாட்களை ஆடுவதாகவும், அதை தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.