
மதுரையில் பிரம்மாண்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் எம்எஸ் தோனி
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் முக்கிய நகரமான மதுரையில், சுமார் ரூ.325 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வியாழக்கிழமை (அக்டோபர் 9) திறந்து வைத்தார். சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில், வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த மைதானம் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்திற்குப் பிறகு, தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது பார்க்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 20,000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் மருத்துவ வசதிகள் உட்படப் பல நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாட்டு வல்லுநர்கள்
வெளிநாட்டு வல்லுநர்கள் ஆலோசனையில் கட்டமைப்பு
இந்த மைதானத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் வடிகால் அமைப்பு ஆகும். பெங்களூருவில் உள்ளதைப் போல, மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் மைதானத்தைச் சுற்றி 5 அடியில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதான வல்லுநர்களின் ஆலோசனையின்படி, சர்வதேசத் தரத்தில் மைதான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானத்தைத் திறந்து வைத்த பின், சிறிய ரக பேட்டரி காரில் மைதானத்தைச் சுற்றி வலம் வந்த அவர், அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகளைப் பார்த்துக் கையசைத்து உற்சாகப்படுத்தினார்.