"CSK தலைமைப் பயிற்சியாளராக தோனியே தகுதியானவர்": கூறியது யார்?
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை இந்திய அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நிராகரித்துள்ளார். நீண்ட காலம் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளெமிங் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அணியில் தோனி இருக்கும்போது வேறு ஒரு பயிற்சியாளர் தேவையே இல்லை என்றும், தோனியே அந்தப் பொறுப்பை ஏற்கப் போதுமானவர் என்றும் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் தளத்தில் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
ஹேமங் பதானி குறித்த விமர்சனமும் மாற்றுப் பரிந்துரையும்
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகப் பொறுப்பில் கடந்த இரண்டு சீசன்களாக இருந்த ஹேமங் பதானி, அந்த அணியை பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட அழைத்துச் செல்லவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஸ்ரீகாந்த், "ஹேமங் பதானியை சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க எந்த முகாந்திரமும் இல்லை; அவர் பயிற்சியாளராகச் சிறப்பான எதையும் நிரூபிக்கவில்லை. அவரை நோக்கி சிஎஸ்கே நிர்வாகம் ஏன் செல்ல வேண்டும்? தோனியே இருக்கும்போது சிஎஸ்கே-வுக்கு வேறு பயிற்சியாளர் எதற்கு? ஒருவேளை இந்தியப் பயிற்சியாளர்தான் வேண்டும் என்று தோனி விரும்பினால், முன்னாள் கேகேஆர் பயிற்சியாளரான சந்திரகாந்த் பண்டிட்டைத் தேர்ந்தெடுக்கலாம்".
"சர்வதேச அளவில் முத்திரை பதித்த ஒரு வீரராகவோ அல்லது உள்நாட்டுப் போட்டிகளில் கோப்பைகளை வென்ற ஆளுமையாகவோ இருக்கும் ஒருவரே சிஎஸ்கே பயிற்சியாளராக வர வேண்டும்" என்றார்.
அவசர முடிவுகள் வேண்டாம்
சிஎஸ்கே-வுக்கு ஸ்ரீகாந்த் அறிவுரை
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் நிர்வகிக்கவுள்ள நிலையில், அங்கு தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலியும், உதவி பயிற்சியாளராக யுவராஜ் சிங்கும் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் சூழலில், சிஎஸ்கே பொறுமையாக முடிவெடுக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில்தான் நடைபெறவுள்ளதால், தலைமைப் பயிற்சியாளர் நியமனத்தில் நிர்வாகம் அவசரம் காட்டத் தேவையில்லை என்றும், நிதானமாக யோசித்துச் சரியான தலைவரைத் தேர்வு செய்வதே அணிக்கு நல்லது என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.