ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடமில்லை; இன்ஸ்டாகிராமில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது ஏமாற்றத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கணுக்கால் காயம் காரணமாக 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து விலகியிருந்த முகமது ஷமி, தேசிய கிரிக்கெட் அகாடமியில் அறுவை சிகிச்சை செய்து மீண்டு வந்துள்ளார். அவர் முழங்காலில் வலி இல்லை என்று தெரிவித்தாலும், நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இருந்து அவரை தேர்வுக்குழு விலக்கி வைத்தது. இதைத் தொடர்ந்து முகமது ஷமி பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
முகமது ஷமியின் இன்ஸ்டாகிராம் பதிவு
முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது முயற்சிகளை மேற்கொள்கிறேன். நாளுக்கு நாள் எனது பந்துவீச்சு உடற்தகுதியுடன் மேம்பட்டு வருகிறது. தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். விரைவில் ரெட்-பால் கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளதோடு, அணியில் சேர முடியாமல் போனதற்கு ரசிகர்களிடமும் பிசிசிஐயிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், முகமது ஷமி இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு என்று கூறியுள்ளார். இதற்கிடையே, வங்காளத்தின் வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளில் முகமது ஷமி தனது உடற்தகுதியை நிரூபித்தால், தொடரின் பிற்பகுதியில் அவர் இந்திய அணியில் சேரலாம் எனக் கூறப்படுகிறது.