பும்ராவின் 2 ஆண்டுகால ஆதிக்கம் காலி! முதன்முறையாக ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளரானார் மிட்செல் ஸ்டார்க்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 36 வயதான முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம், அவர் இந்த அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளி ஸ்டார்க் சிம்மாசனத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஆதிக்கம் முடிவு
பும்ராவின் ஆதிக்கம் முடிவு மற்றும் தரவரிசை மாற்றம்
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்த ஜஸ்ப்ரீத் பும்ரா, தற்போது இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா பங்கேற்காததும், மிட்செல் ஸ்டார்க்கின் தொடர் அதிரடி பந்துவீச்சுமே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
15 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையில் பெரும்பாலான காலங்கள் டாப் 10 இடத்திற்குள் இருந்த ஸ்டார்க், தற்போது தனது டெஸ்ட் கிரிக்கெட் கேரியரியிலேயே முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள்
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரிஷப் பண்ட் அபார முன்னேற்றம்
டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திலும், ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி, ஏழாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
ஜடேஜா
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடம்
மற்ற வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 வது இடத்திற்கும், நாதன் லியான் 10 வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.
இங்கிலாந்தின் ஆலி ராபின்சன் 11 வது இடத்திற்கும், ஜோஷ் டங் 17 வது இடத்திற்கும் உயர்ந்துள்ளனர்.
அதேபோல, ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.