பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் 2023 : கேமரூன் கிரீனைத் தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க்கும் வெளியேறினார்!
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால், இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்டில் இருந்து விலகுவதாக உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்காமல், மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில், தான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால், முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டேன் என, ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருது வழங்கும் விழாவின்போது தெரிவித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முக்கியத்துவம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முனைப்பாக உள்ள நிலையில், இரு அணிகளுமே இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்தாலே, இறுதிப்போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துவிடும். ஆனால், அந்த அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயத்தால் அவதிப்படுவதால், இந்திய அணியை எதிர்கொள்வதில் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதே சமயம் இந்திய அணியும் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமானால், இந்த தொடரை முழுமையாகவோ அல்லது 3-0, 3-1 என்ற அளவிலோ கைப்பற்றியதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.