சர்வதேச போட்டிகளை மல்யுத்த வீரர்கள் தவிர்ப்பது நல்லதல்ல : மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி!
இந்திய மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை தவிர்த்து வருவது குறித்து இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளது. முன்னதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் மல்யுத்த வீரர்களிடையே ஜனவரி முதல் வெளிப்படையாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், வினேஷ் போகாட், பஜ்ராங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா, அன்ஷு மாலிக் மற்றும் சங்கிதா மோர் உள்ளிட்ட சிறந்த மல்யுத்த வீரர்கள் எகிப்து மற்றும் குரோஷியாவில் நடக்கும் சர்வடதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர். டாப்ஸ் திட்டத்தின் கீழ் மல்யுத்த வீரர்களுக்கு அவர்களின் தயாரிப்பு மற்றும் பயிற்சியை ஆதரிக்க கோடிக்கணக்கில் நிதி உதவியை வழங்கி வரும் மத்திய அரசுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்கள் பங்கேற்க மறுப்பதன் பின்னணி
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் எனக் கூறி ஜனவரியில் வீரர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இதில் நேரடியாக தலையிட்டு, குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தது. புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் தலைமையிலான ஆறு பேர் கொண்டு குழு விசாரித்து வரும் நிலையில், குழு தனது அறிக்கையை பிப்ரவரி 23 அன்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் குழு கூடுதல் அவகாசம் கேட்டதால் இரண்டு வார நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என வீரர்கள் முடிவெடுத்துள்ளதாகக் தெரிகிறது.