அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. பாலியல் புகார்கள் சுமத்தி அவரை பதவி விலகக்கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகள் ஒரு போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் 3 நாட்களாக நடத்தினர். டெல்லியின் ஜந்தர் மந்தர் நூற்றுக்கணக்கான முக்கிய போராட்டங்களைக் கண்டுள்ளது. கடந்த புதன்கிழமை, ஜந்தர்மந்தர் இதுவரை கண்டிராத ஒரு போராட்டத்தை கண்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தினர்.
போராட்டம் வாபஸ்
நேற்று(ஜன:20) இரவு, பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து உறுதியளித்ததை அடுத்து, வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த விசாரணை முடியும் வரை பிரிஜ் பூஷன் விலகி இருப்பார் என்றும் அமைச்சர் தாக்குர் உறுதியளித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் முற்றிலுமாக நிராகரித்துள்ளார். மல்யுத்த வீரர் வினேஷ் மற்றும் பஜ்ரங் புனியா, மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த பிரச்சினைகளை முன்வைத்த்ததாக கூறியுள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சரிதா மோர் உள்ளிட்ட 30 புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.