90 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல்முறை; சாதனைக்கு தயாராகும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் 2026ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் முதல் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதும் என அறிவித்தது. மேலும், இந்திய மகளிர் அணி 2025ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு ஒயிட்பால் ஓவர் தொடரில் பங்கேற்கும் என்றும், அங்கு இரு நாடுகளும் ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என்றும் அறிவித்துள்ளது. இந்தியா கடைசியாக ஜூலை 2021இல் இங்கிலாந்தில் ஒரு டெஸ்டில் விளையாடியது. அங்கு அப்போதைய மிதாலி ராஜ் தலைமையிலான அணி ஹீதர் நைட்டின் இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்
1936இல் மகளிர் கிரிக்கெட் தொடங்கப்பட்டதிலிருந்து, வரலாற்றுப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானம் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட நடத்தியதில்லை. இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், முதல் போட்டியில் விளையாடும் சாதனையை இந்தியா vs இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டி படைக்க உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026இல் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி பங்கேற்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டியாக இது அமையும்." என்று தெரிவித்துள்ளது.