ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர்
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் மார்ச் 31 அன்று தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), ஏப்ரல் 2 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் ஆர்ஆர் அணிக்காக ஆரஞ்சு கேப்பை வென்ற பட்லர், ஐபிஎல்லில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 169 ரன்கள் மட்டுமே தேவையாகும். இதுவரை, 20 வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். பட்லர் ஐபிஎல்லில் 39.87 சராசரியுடன் 2,831 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும். அவர் எடுத்துள்ள ஐந்து சதங்களில் நான்கு சதங்கள் 2022ல் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எனும் சாதனையை நெருங்கும் ஜோஸ் பட்லர்
ஜோஸ் பட்லர் கடந்த சீசனை போலவே இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடக்கும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார். டி20 கிரிக்கெட்டில் பட்லர், 9,407 ரன்களுடன், இங்கிலாந்து வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு (10,916) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும் இந்த ஐபிஎல்லில் ஒன்றுக்கு மேற்பட்ட சதங்களை அடித்தால், ஏழு டி20 சதங்களை அடித்த லூக் ரைட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் பெறுவார். இந்த விஷயத்தில் ஜோஸ் பட்லர் தற்போது 6 சதங்களுடன் ஜேசன் ராய்க்கு நிகராக உள்ளார்.