LOADING...
லியோனல் மெஸ்ஸி மீது $7 மில்லியன் மோசடி வழக்கு! ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிறுவனம்
ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி லியோனல் மெஸ்ஸி மீது $7 மில்லியன் மோசடி வழக்கு

லியோனல் மெஸ்ஸி மீது $7 மில்லியன் மோசடி வழக்கு! ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிறுவனம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 16, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தற்போது ஒரு இக்கட்டான சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ளார். விட் மியூசிக் குரூப் என்ற நிறுவனம், மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது மோசடி மற்றும் ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மியாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு காட்சிப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்காததால் தங்களுக்கு சுமார் $7 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹58 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம்

$7 மில்லியன் ஒப்பந்தமும் மெஸ்ஸியின் மர்மமான மௌனமும்

விட் மியூசிக் குரூப் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெனிசுலா மற்றும் புவேர்ட்டோ ரிகோ அணிகளுக்கு எதிராக அர்ஜென்டினா விளையாடும் நட்பு ரீதியிலான போட்டிகளை ஒருங்கிணைக்கவும், விளம்பரப்படுத்தவும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்துடன் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, மெஸ்ஸி இரண்டு போட்டிகளிலும் குறைந்தது 30 நிமிடங்களாவது விளையாட வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், வெனிசுலாவுக்கு எதிரான போட்டியின் போது மெஸ்ஸிக்காகத் தனி சொகுசு அறை பதிவு செய்யப்பட்டிருந்தும், அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

நஷ்டம்

மெஸ்ஸியின் திடீர் வருகையும் விட் நிறுவனத்தின் நஷ்டமும்

வெனிசுலா போட்டியில் விளையாடாத மெஸ்ஸி, அதன் பிறகு இன்டர் மியாமி அணிக்காக அட்லாண்டா அணிக்கு எதிராக விளையாடி இரண்டு கோல்களை அடித்தார். இது அவர் விளையாடுவதற்குத் தகுதியுடன் இருந்ததையே காட்டுகிறது என்று விட் நிறுவனம் வாதிடுகிறது. புவேர்ட்டோ ரிகோவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மெஸ்ஸி விளையாடி இரண்டு அசிஸ்ட்களை வழங்கிய போதிலும், அதற்குள் தங்களுக்குப் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது. முதலில் சிகாகோவில் நடைபெறவிருந்த இந்தப் போட்டி, டிக்கெட் விற்பனை மந்தமாக இருந்ததால் புளோரிடாவிற்கு மாற்றப்பட்டது. டிக்கெட் விலையை $25 ஆகக் குறைத்தும் மெஸ்ஸி முதல் போட்டியில் விளையாடாததால் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என நிறுவனம் கூறுகிறது.

Advertisement

தொடர் சர்ச்சை

தொடரும் சர்ச்சைகளும் மெஸ்ஸியின் தற்போதைய நிலையும்

மெஸ்ஸி இத்தகைய சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. சமீபத்தில் இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்திற்கு வந்திருந்த போது, ரசிகர்களுடன் கலந்துரையாடாமல் மெஸ்ஸி வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா என்பது உறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சட்டப் சிக்கல்களுக்கு மத்தியிலும் மெஸ்ஸி களத்தில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். இன்டர் மியாமி அணியில் இணைந்த பிறகு 96 போட்டிகளில் 83 கோல்களை அடித்துள்ள அவர், அந்த அணி பல கோப்பைகளை வெல்லவும் உதவியுள்ளார்.

Advertisement

விடாப்பிடி

நிறுவனத்தின் விடாப்பிடி

அர்ஜென்டினா கால்பந்து சங்கம் இந்தத் தோல்விக்குக் குடிவரவு கட்டுப்பாடுகளைக் காரணமாகக் கூறினாலும், விட் நிறுவனம் விடாப்பிடியாகத் தனது நஷ்டத்திற்கு மெஸ்ஸியே காரணம் எனத் தெரிவித்துள்ளது. வரும் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி முக்கியப் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த $7 மில்லியன் மோசடி வழக்கு அவரது பெயருக்கு ஒரு சிறு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மெஸ்ஸிக்கு சாதகமாக அமையுமா அல்லது அவர் அபராதம் செலுத்த வேண்டியிருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement