Loading...
வைபவ் சூர்யவன்ஷி நீக்கம் நியாயமற்றது: தேர்வுக்குழுவை விளாசிய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்
ஜிம்பாப்வே தொடர் நாயகன் சூர்யவன்ஷி ஆப்கன் தொடரின் முதல் போட்டியில் புறக்கணிக்க பட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி நீக்கம் நியாயமற்றது: தேர்வுக்குழுவை விளாசிய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்

எழுதியவர் Vasuki
Sep 15, 2026
01:50 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் லெவன் அணியில் சேர்க்கப்படாததை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஜிம்பாப்வே தொடரில் 196.10 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 151 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற ஒரு வீரரை, அடுத்த தொடரின் முதல் போட்டியிலேயே புறக்கணிப்பது இளம் வீரர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் அநீதியான செயல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவேசம்

"என் மனைவியே கேள்வி கேட்கிறார்"

தனது யூடியூப் தளத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "நேற்று போட்டியில் சூர்யவன்ஷி விளையாடாததால் நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டுத் திரைப்படம் பார்க்கத் தொடங்கிவிட்டோம். என் மனைவியே என்னிடம் கோபப்பட்டு, கடந்த போட்டியில் தொடர் நாயகன் விருது வென்ற ஒரு வீரரை எப்படி உட்கார வைக்க முடியும் என்று வாக்குவாதம் செய்தார்".

"என் மனைவியே இந்த நீக்கம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார் என்றால், அணி நிர்வாகம் சூர்யவன்ஷியைச் சரியாக நடத்தவில்லை என்பதுதானே அர்த்தம்? அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுத்தாலும், ரன் அடிக்காவிட்டால் மீண்டும் நீக்கிவிடுவார்களோ என்ற பயத்துடனே அந்தப் பையன் விளையாட வேண்டியிருக்கும்" என்று ஆதங்கப்பட்டார்.

தெளிவற்ற தேர்வு

சஞ்சு சாம்சன் விவகாரம்

அதேவேளையில் சஞ்சு சாம்சனை அணி நிர்வாகம் நடத்தும் விதம் குறித்தும் பேசிய ஸ்ரீகாந்த், அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனின் வாழ்க்கையோடும் விளையாடுகிறது.

"அவரைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சாம்சனுக்குத் தொடர்ந்து பல வாய்ப்புகளைக் கொடுத்துப் பின் நீக்குங்கள், அல்லது சூர்யவன்ஷிக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்குங்கள்".

இருவருக்குமே ஆளுக்கு இரண்டு போட்டிகள் மட்டும் கொடுத்து மாற்றி மாற்றி உட்கார வைப்பது இருவரின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்று சுட்டிக்காட்டினார்.

முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 82 ரன்கள் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT