7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்துவது ஏன்? எம்.எஸ்.தோனி கூறும் காரணம் இது தான்!
இந்தியன் பிரீமியர் லீக் 2023க்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தோனி தனது ஜெர்சி எண்ணாக 7'ஐ வைத்துள்ளதற்கான காரணம் குறித்து கூறிய தகவல் மீண்டும் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒவ்வொரு வீரரும் ஒரு குறிப்பிட்ட எண் கொண்ட ஜெர்சியை தொடர்ந்து பயன்படுத்துவது வழக்கம். இதற்கு நம்பிக்கை, அதிர்ஷ்டம் உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு. அந்த வகையில் தோனி இந்திய அணியிலும் சரி, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியிலும் சரி 7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை பயன்படுத்தி வருகிறார். ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்னதாக அளித்த ஒரு பேட்டியில், தனது பிறந்த நாள் ஜூலை 7 என்பதால் தான் அதை நினைவுகூரும் வகையில் வைத்துள்ளதாகக் கூறினார்.
2023 ஐபிஎல்லுடன் ஓய்வு பெறும் எம்.எஸ்.தோனி
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி, இந்தியாவுக்காக ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் தோனி, நான்கு முறை பட்டம் வென்று கொடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வரும் நிலையில், இந்த சீசனோடு ஐபிஎல்லுக்கும் ஓய்வு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அவரை இந்திய அணியின் ஒயிட் பால் கிரிக்கெட் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.