காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆரம்ப கட்டத்தை இழக்க உள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஜோஷ் ஹேசில்வுட் தற்போது குணமடைந்து வருகிறார். ஆரம்ப கட்டத்தில் அவர் பங்கேற்காத நிலையில், சீசனின் பிற்பகுதியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் ஹேசில்வுட்டின் செயல்பாடு சமீபகாலமாக சிறப்பாக இருந்து வருவதால், அவர் இடம் பெறாதது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
ஐபிஎல்லில் ஜோஷ் ஹேசில்வுட் புள்ளிவிபரங்கள்
ஹேசில்வுட் கடந்த சீசனில் 12 ஆட்டங்களில் 8.1 என்ற எகானமியுடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக, அவர் 24 ஐபிஎல் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 4/25 என அவரது சிறந்த பந்துவீச்சாகும். ஆர்சிபி அவரை டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் ரூ.1.9 கோடி கொடுத்து வாங்கியிருந்த நிலையில், இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அணிக்கு கொடுத்துள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி ஹேசில்வுட்டிற்கு பதிலாக பிளேயிங் 11'இல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேசில்வுட்டைத் தவிர, ரஜத் படிதார் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அணியில் இடம் பெறுவதும் சிக்கலில் இருப்பதால், செய்வதறியாத நிலையில் ஆர்சிபி போராடிக் கொண்டு உள்ளது.