Loading...
சாண்ட்பேப்பர் சர்ச்சை: கம்மின்ஸ் கருத்தை மறுத்து கவாஜாவை ஆதரித்த சாட் சேயர்ஸ்
சாண்ட்பேப்பர் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய அணியினர் அனைவருக்கும் தெரியும் என சேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

சாண்ட்பேப்பர் சர்ச்சை: கம்மின்ஸ் கருத்தை மறுத்து கவாஜாவை ஆதரித்த சாட் சேயர்ஸ்

எழுதியவர் Vasuki
Nov 15, 2026
04:15 pm

செய்தி முன்னோட்டம்

2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகையே உலுக்கிய சாண்ட்பேப்பர்கேட் (Sandpapergate) பந்தைச் சேதப்படுத்திய விவகாரம், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் கவாஜா தனது சபர் புத்தகத்தில் அணியின் அனைத்து வீரர்களுக்கும் சாண்ட்பேப்பர் பயன்படுத்தியது தெரியும் எனக் கூறியிருந்த நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது எனக் கேப்டன் பேட் கம்மின்ஸ் மறுப்புத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் 12-வது வீரராக இடம்பெற்றிருந்த சாட் சேயர்ஸ் (Chadd Sayers), உஸ்மான் கவாஜாவின் கருத்தை உறுதிப்படுத்திப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சாட் சேயர்ஸின் வாக்குமூலம்

ஓய்வறையில் நடந்த ரகசிய ஆலோசனை

பிரபல விளையாட்டு ஊடகமான சென் வானொலிக்குப் பேட்டியளித்துள்ள சாட் சேயர்ஸ், தான் நடுநிலையாக இருந்து உண்மையைப் பேசுவதாகவும், கேப் டவுன் டெஸ்ட் மட்டுமின்றி அதற்கு முந்தைய போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியிலிருந்தே சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்பட்டது அணியிலிருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வது குறித்து ஆஸ்திரேலிய ஓய்வறையில் விவாதிக்கப்பட்டதாகவும், கேமராக்களின் கண்காணிப்பு எப்போதும் டேவிட் வார்னர் மீது இருந்ததால் அவர் நேரடியாக ஈடுபடாமல் விலகியிருக்க, கேமரூன் பான்கிராஃப்ட் தானாக முன்வந்து இப்பணியைச் செய்ததாகவும் சேயர்ஸ் 100 சதவீதம் உறுதியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

கம்மின்ஸ் வாதம்

கம்மின்ஸின் வாதத்திற்கு பதிலடி

பந்துவீச்சாளர்களுக்குப் பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் தெரியாது என்ற பேட் கம்மின்ஸின் வாதத்தை மறுத்துள்ள சாட் சேயர்ஸ், ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய ஒட்டுமொத்த அணியின் ஒருங்கிணைப்பும் அவசியம் என்பதால், பந்தின் தன்மையை மாற்றும் எந்தவொரு செயலும் பந்துவீச்சாளர்கள் உட்பட அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கவாஜாவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த செய்தியாளர் சந்திப்பில் பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட முறையில் கவாஜாவை விமர்சித்தது தனக்குப் பிடிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அனைவரும் உண்மையை ஒப்புக்கொள்ளாத வரை இந்தச் சர்ச்சை ஒருபோதும் ஓயாது என்றும் சேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT